ப.வேலூர்: ப.வேலூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர், விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தங்கியிருந்த அறையில் கிடைத்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூரைச் சேர்ந்தவர் விவசாயி ரேணுகோபால். அவரது இரண்டாவது மகள் கிருபா (15), நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார்.நேற்று காலை 6.30 மணியளவில், விடுதி மாணவியர் படிப்பதற்காக புறப்பட்டுள்ளனர். அப்போது மாணவி கிருபா வரவில்லையெனக் கூறி, விடுதி அறையில் இருந்துள்ளார். பின், 7.30 மணியளவில் விடுதி வார்டன் மற்றும் மாணவ, மாணவியர் அறைக்கு வந்துள்ளனர்.அப்போது மாணவி கிருபா, பள்ளி ஆசிரியை ஒருவரது சேலையால் ஃபேனில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர். அதுகுறித்து பரமத்தி போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மாணவி கிருபாவின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி கிருபா தங்கியிருந்த அறையினுள் டைரி, கடிதம் இருந்துள்ளது. டைரியில், 'எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. அப்பா உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளவும் எனக் குறிப்பிட்டிருந்தது.டைரியின் மற்றொரு பக்கத்தில், 'ஐ லவ் யூ வேலு' என எழுதப்பட்டிருந்தது. அதனால், மாணவியின் சாவுக்கு காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, கிருபா எழுதி வைத்த கடிதத்தை தங்களிடம் காட்டும்படி போலீஸாரிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். அதனால், கிருபாவின் பிரேதத்தை பரிசோதனை செய்யக்கூடாது என, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவி தங்கியிருந்த அறைக்கு, பரமத்தி போலீஸார் அழைத்துச் சென்றனர். அதன்பின், மாலை 3 மணியளவில் மாணவி கிருபாவின் பிரேத பரிசோதனைக்கு பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ப.வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.