ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என, ஏராளமானோர் நேற்று வேட்புமனு
தாக்கல் செய்ய குவிந்ததால், நகராட்சி அலுவலகம் களை கட்டியது.ராசிபுரம்
நகராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் பாலசுப்ரமணியம்,
தே.மு.தி.க., சார்பில் தர்மராஜா, காங்கிரஸ் சார்பில் தாஜ் முகம்மது,
பா.ம.க., சார்பில் நல்வினைச்செல்வன், ம.தி.மு.க., சார்பில் ஆடிட்டர்
தங்கவேல், பா.ஜ., சார்பில் குமார், ஐ.ஜே.கே., வக்கீல் விஜயன், த.மு.மு.க.,
சார்பில் அப்துல்சலீம் ஆகிய எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.அனைவரும்
நேற்று மனு தாக்கல் செய்தனர். அவர்களை தொடர்ந்து, பல்வேறு கட்சி
வேட்பாளர்கள், கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர். மதியம் ஒன்றரை
மணிக்கு மேல் ராகுகாலம் ஆரம்பித்ததால், அதற்குள் வேட்பு மனுக்களை தாக்கல்
செய்ய வேண்டும் என்ற ஆவலால், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் களை
கட்டியது.அந்தந்த கட்சி ஆதரவாளர்கள், தங்கள் வேட்பாளருடன் மேளதாளம் முழங்க,
நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, மதியத்துக்குள் வேட்புமனு தாக்கல்
செய்தனர். அதனால், நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியான நாமக்கல் ரோடு,
திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது.நேற்று மட்டும் கவுன்சிலர் பதவிக்கு,
124 பேர், சேர்மன் பதவிக்கு, 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மொத்தம், 27வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, 197 பேரும், தலைவர் பதவிக்கு,
19 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தி.மு.க., அ.தி.மு.க.,
தே.மு.தி.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா, 27 பேரும், ம.தி.மு.க.,
சார்பில் 18 பேர் மற்றும் காங்கிரஸ், சுயேட்சைகள் என, 197 பேர் வேட்புமனு
தாக்கல் செய்துள்ளனர்.