நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், போதை ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், கூட்டு ஆய்வுக்குழு மற்றும் அதனை கண்காணிக்கும் வகையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக, நாமக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய், போலீஸ் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை சார்ந்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், தாசில்தார், பி.டி.ஓ., வி.ஏ.ஓ., பஞ்., செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன், போதை ஒழிப்பு குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, போதை ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நாமக்கல் மாவட்டத்தில், போலி மதுபானம் விற்பனை செய்த, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மதுபானம் விற்பனை செய்பவர் கண்டறியப்பட்டால், ஜாமினில் வெளிவர முடியாத வகையில் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போதை ஒழிப்பு நடவடிக்கைகளில், அரசு அலுவலர்கள் அச்சமின்றி தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும், போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். போலீஸ், வருவாய் மற்றும் வளர்ச்சித்துறை என அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து பணியாற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், டி.எஸ்.பி., தனராசு, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.