காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த அதிகாரிகள்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் உறுதி தன்மையை, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நாமக்கல்-ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே முதல்வராக இருந்த காமராஜர் ஆட்சி காலத்தில், 32 பில்லர், 33 தாங்கு தளத்துடன், 449.80 மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டு, 1960ல், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஓரிருமுறை ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பாலத்தை தொட்டபடி தண்ணீர் சென்றது. மேலும் இடி, மின்னல், வெள்ளம், மழை என அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தில் இன்னும் பஸ், லாரி, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.பாலம் கட்டப்பட்டு 64 ஆண்டுகள் நிறைவடைந்ததால், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து நேற்று, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் நடராசன் ஆகியோர், பாலத்தின் மேற்பரப்பில் உள்ள கான்கிரீட் தளம், பாலத்தின் இருபுறத்திலும் உள்ள பாதுகாப்பு சுவர், பாலத்தின் உயரம், அகலம், நீளம் குறித்துஆய்வு செய்தனர். இதையடுத்து பரிசல் மூலம் ஆற்றில் சென்று, பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள பில்லர்கள், தாங்கு தளத்தின் கான்கிரீட் தன்மை மற்றும் விரிசல் ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.ஏற்கனவே கடந்த, 17ம் தேதி சென்னையில் இருந்த வந்த நெடுஞ்சாலைதுறை உயர் அதிகாரிகள், இந்த பழைய பாலத்தை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.