பழுதை சரி செய்யாமல் இழுத்தடிப்பு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல், ப.வேலுார் தாலுகா, கோலாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவர், ஈரோட்டில் உள்ள தனியார் ஷோரூம் ஒன்றில், 2024 அக்., 30ல், 49,144 ரூபாய் செலுத்தி புதிதாக வாசிங் மிஷின் வாங்கினார். அந்த மிஷின் வாங்கிய சில நாட்களிலேயே பழுதானது. அதை சரிசெய்து தரும்படி, ஷோரூமை அணுகினார். ஆனால், அவர்கள் சரிசெய்து கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.அதில், 'குறைபாடுள்ள வாசிங் மிஷினின் முழு விலையையும், சுதாவுக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 30,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.