வெள்ளம் வடிந்ததால் வீடுகளுக்கு திரும்பிய மக்கள்
குமாரபாளையம், குமாரபாளையம், காவிரி ஆற்றில் வெள்ளம் வடிந்ததால் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு மக்கள் திரும்பினர். கர்நாடக மாநிலத்தில் தொடரும் கனமழையால், திறந்து விடப்படும் நீர், மேட்டூர் அணைக்கு வந்தது. அதன் கொள்ளளவான 120 அடியை எட்டிய நேரத்தில், காவிரி ஆற்றில் வரும் உபரி நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி கரையோர பகுதியில் வசித்த, 36 குடும்பத்தை சேர்ந்த, 84 பேர் கலைமகள் வீதி நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டன. தகவல் அறிந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருமண மண்டபத்தில் தங்கியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்றுமுன்தினம் காவிரியில் வெள்ளம் வடிந்ததையடுத்து, பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.