மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.16.73 லட்சத்தில் நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்ரூ.16.73 லட்சத்தில் நலத்திட்ட உதவிநாமக்கல், அக். 1-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 91 பேருக்கு, 16.73 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 507 மனுக்கள் வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், பொம்மப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 3 விவசாயிகளுக்கு, 1.60 லட்சம் ரூபாய் வட்டியில்லா பயிர்கடன், கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு, பட்டப்படிப்பு முடித்த, 52 பேருக்கு, தலா, 20,000 ரூபாய் வீதம், 10.40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த, 34 பேருக்கு, தலா, 10,000 வீதம், 3.40 லட்சம் ரூபாய் சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த, ஆக., 14ல், தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட தாட்கோவிற்கு சொந்தமான, 3 அரசு சமுதாய கூடங்களை பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்வதற்காக, மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 பேருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 1.33 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ., சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.