கள் இறக்க வைத்திருந்த கலயம் சேதம் டி.எஸ்.பி.,-இன்ஸ்.,ஐ கைது செய்ய மனு
நாமக்கல், 'தோட்டத்தில் கள் இறக்க வைத்திருந்த கலயத்தை சேதப்படுத்திய டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்களை கைது செய்ய வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து, கள் இறக்க அனுமதிக்ககோரியும், கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்ககோரி, கடந்த, 9ல், நாமக்கல் அடுத்த கோனுாரில் அமைந்துள்ள என் சொந்த தோட்டத்தில், தென்னை மரத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.போராட்டத்திற்கு முன்தினம், (செப்., 8) தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில், கள் இறக்க வைத்திருந்த, 50க்கும் மேற்பட்ட கலயத்தை, ப.வேலுார் டி.எஸ்.பி., தலைமையில், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், எவ்வித அறிவிப்பும் இன்றி, தோட்டத்துக்குள் புகுந்து உடைத்து சேதப்படுத்தினர்.மேலும், தென்னை மரத்தில் உள்ள மட்டை, பாலைகளை சேதப்படுத்தியதால், ஐந்து லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளன. முறையான எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், தென்னந்தோப்பில் கலயங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.