நாமக்கல்: நாமக்கல், ராசிபுரம் ஆகிய நகராட்சிகள், மோகனுார், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, பட்டணம், பிள்ளாநல்லுார், அத்தனுார் மற்றும் வெண்ணந்துார் ஆகிய டவுன் பஞ்.,களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர், 2023 டிச., 18ல், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சிகள், 18 டவுன் பஞ்.,களில், 39 முகாம் நடந்தது. இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக நாமக்கல், ராசிபுரம் நகராட்சிகள், 11 டவுன் பஞ்.,களில், 3,349 பயனாளிகளுக்கு, 13.14 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மோகனுார் டவுன் பஞ்.,ல், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், தனி கூட்டு குடிநீர் திட்டம், 22.77 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு பேசினார்.நகராட்சி தலைவர்கள் கலாநிதி, கவிதா, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சரவணன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், நகராட்சி கமிஷனர்கள் சென்னுகிருஷ்ணன் சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.