| ADDED : பிப் 17, 2024 12:55 PM
நாமக்கல்: பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில், தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளான 'இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி வினா, வானவில் மன்றம் சார்ந்த போட்டிகள், நாமக்கல்லில், மூன்று நாட்கள் நடந்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இலக்கிய மன்றம் சார்பில், பேச்சு, கட்டுரை, கவிதை எழுதும் போட்டி பல்வேறு தலைப்புகளில் நடந்தது. அதில், மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில் இருந்து, 180 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில், போட்டிக்கு முதல் மூன்று பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதலிடம் பெற்றவர்கள், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.