ராசிபுரம் போலீஸ் ஏட்டு கணவர் சடலமாக மீட்பு
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி அருகே, நேற்று காலை, 'பஜாஜ் டிஸ்கவர்' டூ--வீலர் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், வண்டி அருகே சென்று பார்த்தபோது, ஏரி தடுப்புச்சுவர் அருகே தண்ணீரில் ஆண் உடல் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த ராசிபுரம் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அதில், இறந்தவர், நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன், 46, என்பது தெரிந்தது. இவர், சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கொடி, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்ச்சுக்கு செல்வதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே வந்தவர், வீட்டிற்கு செல்லவில்லை. கோனேரிப்பட்டி ஏரியில் விழுந்து எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.