சகதியாக மாறிய சுரங்கப்பாதை துாய்மைப்படுத்த வேண்டுகோள்
பள்ளிப்பாளையம், காவிரி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீருடன் சேர்ந்த கழிவுநீரால், சேறும், சகதியுமாக காணப்படுகிறது.பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை வழியாக பஸ், லாரி, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து அடித்து வரப்பட்டு சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் தேங்கியது. இதனால் மையப்பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் செல்ல முடியாமல் தடுமாறினர். டூவீலரில் கவனக்குறைவாக சென்றால் சறுக்கி விழும் வாய்ப்புள்ளது. எனவே, சுரங்கப்பாதையில் தேங்கிய சகதியை அகற்ற, பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.