| ADDED : ஜூன் 18, 2024 12:15 PM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பாலமேடு ஹாஸ்டல் பகுதியில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மையம் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் இத்தொட்டியின் அடிப்பாக துாண்கள் சிதிலமடைந்தன. இதன் உறுதி தன்மையை உணர்ந்த அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதன் அருகிலேயே வேறு ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கட்டினர். ஆனால், பழைய தொட்டியை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர்.இதனால், எந்த நேரம் வேண்டுமானாலும் தொட்டி இடிந்து கீழே விழும் வாய்ப்புள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் அருகில் தண்ணீர் பிடிக்க வருபவர்கள், அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும், அருகில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால், குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடனே பெற்றோர் விட்டு செல்கின்றனர். எனவே, சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.