சாலை விபத்தில் ரூ.5 கோடி இழப்பீடு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம், 35. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைநகர் அபுதாபியில் இன்ஜினியராக வேலை பார்த்தார். இவருக்கு மனைவியும், 9 வயதில் மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு, 29ம் தேதி அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனை பார்க்க ஆகஸ்டு, 30ம் தேதி துபாயில் இருந்து கவுதம் வந்தார். செப்., 12ம் தேதி நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த கவுதம், மகளை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றார். நாமக்கல் - திருச்சி சாலையில் சென்றபோது, கவுதம் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் கவுதம் இறந்தார்.கவுதம் குடும்பத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் மோட்டார் வாகன விபத்து காப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். கவுதம் தரப்பில் வக்கீல் வடிவேல் பங்கேற்றார். இறந்து போன கவுதம் குடும்பத்திற்கு, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதை கவுதம் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதால், இந்த வழக்கில் சமரச தீர்வு ஏற்பட்டது.இறந்து போன கவுதம் மாதம், 3.25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். அந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சமரசம் ஆனது.