மேலும் செய்திகள்
சாயக்கழிவால் பாதிப்பு 5 துறை அதிகாரிகள் ஆய்வு
26-Nov-2024
பள்ளிப்பாளையம், 'சாயக்கழிவுநீர் வெளியேற அமைக்கப்பட்டுள்ள ரகசிய குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும்,'' என, சாயக்கழிவுநீர் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், ஆலை உரிமையாளர்களுக்கு, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா பகுதியில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஆற்று தண்ணீர் மாசடைந்து விடுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு, பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த மாதம், பள்ளிப்பாளையம் இ.ஆர்., தியேட்டர் பகுதியில் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீரும், அங்குள்ள கிணற்று நீரும் பாதிக்கப்பட்டது. அதேபோல், ஓடக்காடு பகுதியில் விவசாய நிலத்தில் சாயக்கழிவுநீர் புகுந்ததால், 10 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.இதையடுத்து, மாவட்ட கலெக்டருக்கும், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளுக்கும், பல தரப்பில் இருந்து புகார்கள் சென்றன. இந்நிலையில், நேற்று மாலை பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், சாயக்கழிவுநீர் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாசு கட்டுப்பாட்டுவாரியம், வருவாய்த்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மை துறை, போலீசார் உள்ளிட்ட, 14 துறை அதிகாரிகளும் மற்றும் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட சாய ஆலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆர்.டி.ஓ., சுகந்தி பேசியதாவது:சாயக்கழிவுநீரால் பாதிப்பு என, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது என, இரவு நேரத்திலும் புகார் வருகிறது, வீடியோவும் வருகிறது. சாயக்கழிவுநீரை வெளியேற்ற ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி இல்லாமல், விதிமீறி செயல்பட்டால், 'சீல்' வைப்பு, மின் துண்டிப்பு மட்டுமின்றி சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.சாய ஆலை உரிமையாளர்கள் பேசுகையில், 'பொய்யான புகார் தருகின்றனர். விசாரணை செய்யவேண்டும். பல ஆண்டுகளாக பொது சுத்திகரிப்பு நிலையம் கிடப்பில் உள்ளது. சாய தொழிலை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.நிருபர்கள்வெளியேற்றம்சாயக்கழிவுநீர் தடுப்பு குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், பத்திரிகை நிருபர்கள் செய்தி சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர், 'நிருபர்கள் அனைவரும் வெளியே செல்லுமாறு, ஆர்.டி.ஓ., கூறியுள்ளார். கூட்டம் முடிந்ததும் அவரே உங்களை சந்திப்பார்' என, மண்டபத்தை விட்டு வெளியேற்றினார். பின், 45 நிமிடத்திற்கு பின், நிருபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, ஆர்.டி.ஓ., சுகந்தி கூறுகையில், ''கூட்டத்தில் நிருபர்கள் இருந்தால், சாய ஆலை உரிமையாளர்கள் பேச தயக்கமடைகின்றனர். அதனால் தான் நிருபர்கள் வெளியேற்றப்பட்டனர். வேறு காரணம் ஏதும் இல்லை,'' என்றார்.
26-Nov-2024