நாமக்கல்: ''அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, 'இண்டியா' கூட்டணியை ஏற்படுத்தி, அடுத்த பிரதமரை உருவாக்கும் நிலைக்கு உயர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின்,'' என, தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' லோக்சபா தொகுதி பொதுக்கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் வரவேற்றார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: மத்திய அரசு, சர்வாதிகாரம் என்ற ஆயுதத்துடன் நிற்கிறது. மத்திய அரசு, மதவெறி என்ற ஆயுதத்தை எடுத்தால், தமிழக முதல்வர், சிறுபான்மை, மத நல்லிணக்கம் என்ற ஆயுதத்துடன் நிற்கிறார். இந்தியாவில், 3-வது பெரிய கட்சியாக, தி.மு.க., வளர்ந்துள்ளது. பா.ஜ.,வை தனி ஒருவராக எதிர்க்கிற வல்லமை கொண்டவர் ஸ்டாலின் மட்டுமே. 2022-23ல், நாட்டின் நிலையான வளர்ச்சி சதவீதம், 7.24. தமிழகத்தின் வளர்ச்சி, 8.19 சதவீதம்.கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் தலைச்சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. வலுவான எதிரியை எதிர்க்க போகிறோம் என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால், அது மாயத்தோற்றம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, 'இண்டியா' கூட்டணியை ஏற்படுத்தி, அடுத்த பிரதமரை உருவாக்கும் நிலைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். இரட்டை இன்ஜின் போல், மத்திய அரசு, கவர்னரை கொண்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.