வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி 3ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி3ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்நாமக்கல், அக். 17-'வி.ஏ.ஓ.,வை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் துறை கூட்டமைப்பினர், தொடர்ந்து, மூன்றாம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, கீரம்பூர் பிர்காவிற்கு உட்பட்ட நருவலுாரில், வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வருபவர் ராமன். கடந்த, 4ல், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி திருமுருகன் அகற்றினார்.இது குறித்த புகாரின் பேரில், வி.ஏ.ஓ., ராமன், சம்பவ இடத்துக்கு சென்று, மரம் அகற்றியது குறித்து திருமுருகனிடம் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த திருமுருகன், வி.ஏ.ஓ., ராமனை தாக்கி உள்ளார். இது குறித்து, வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், விவசாயி திருமுருகனை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.இச்செயலை கண்டித்து, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள், வருவாய் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.அதையடுத்து, போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் நாளாக நேற்றும், கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமிநரசிம்மன் வரவேற்றார். தமிழ் மாநிநல வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணகுமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில், வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் துறையினர் என, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.