இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும்: கலெக்டர்
நாமக்கல் :நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில், 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, மரக்கன்று நடவு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், ஒவ்வொரு ஆண்டும், 32 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டமான, 'பசுமை தமிழகம் இயக்கத்தை' 2022 செப்., 22ல் தொடங்கி வைத்தார். தமிழக அரசு, காடு மற்றும் மரங்களின் பரப்பளவை, மாநிலத்தின் மொத்த பரப்பளவில், 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.மரக்கன்றுகளை நடுவதால் புவி வெப்பமடைதல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம் கட்டுபடுதல், நீர்வளம் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவு உயர்த்துல், மண் அரிப்பு தடுத்தல், நிலத்தடி நீர்மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.அதன்படி, தற்போது, வேம்பு, புங்கன், நாவல், நீர்மருது, பாதாம், மகிழம் உள்ளிட்ட, 200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் உயரிய நோக்கம், மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நடவேண்டும். மரக்கன்றுகள் நடுவதன் மூலம், நம் தலைமுறை கடந்தும், நம் சந்ததிகளை பாதுகாக்கும். காற்று மாசு தடுக்கப்படுகிறது. அதனால், இன்றைய இளைய தலைமுறைகள், அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பசுமை பள்ளிகளுக்கிடையே நடந்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.