வரும் 8 வரை டோக்கன், 9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்: கலெக்டர் தகவல்
நாமக்கல், ஜன. 4-'வரும் 8 வரை டோக்கனும், 9 முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:'வரும், 2025ம் ஆண்டு, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்' என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 5,39,303 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், 730 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என, மொத்தம், 5,40,033 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக, இன்று (நேற்று) முதல், வரும், 8 வரை ரேஷன் கார்டுதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும்.அனைத்து ரேஷன் கடைகளிலும், வரும், 9 முதல், பொங்கல் பரிசு தொகுப்பு கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள்படி, கார்டுதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம். அனைத்து அரிசி பெறும் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். தகுதியுள்ள கார்டுதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் எந்த சிரமமுமின்றி பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.