நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழை
நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழைநாமக்கல், நவ. 17-மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், நேற்று காலை முதல் லேசான மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் கன மழையும், பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை முதல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், லேசான மழை பெய்தது. விட்டு விட்டு பெய்ததால், அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் அலுவலர்கள், பணியாளர்கள் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தும் செல்லும் நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,ல்) பின்வருமாறு:குமாரபாளையம், 35.20, நாமக்கல், 2, ப.வேலுார், 1, புதுச்சத்திரம், 1.30, ராசிபுரம், 3, சேந்தமங்கலம், 2, திருச்செங்கோடு, 24, கலெக்டர் அலுவலகம், 2.30, கொல்லிமலை, 8 என, மொத்தம், 78.80 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம், 88.20 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.