| ADDED : பிப் 04, 2024 10:58 AM
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. பருவநிலை மாற்றத்தால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.மேலும் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஆய்வு பணி மேற்கொண்ட சுகாதார துறையினர், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து முழுவதும் கொசு மருந்து அடிக்கும்படி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து டவுன் பஞ்சாயத்து முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை, செயல் அலுவலர் திருநாவுக்கரசு நேற்று துவக்கி வைத்தார்.துப்புரவு மேஸ்திரி ஜனார்த்தனன் தலைமையில், துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் மருந்து தெளித்தும், கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வீட்டை சுற்றியுள்ள உடைந்த தேங்காய் சிரட்டுகள், ஆட்டுக்கல் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி நிற்பதை அகற்றினர். வீடு வீடாக சென்று தண்ணீர் சேமிப்பு டேங்குகளில் புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்து ஊற்றினர்.