| ADDED : மே 29, 2024 07:30 AM
பள்ளிப்பாளையம் : காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கத்தில் மீண்டும் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில், 9 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தேக்கி வைக்கப்படும் தண்ணீர், 10 கி.மீட்டர் துாரத்திற்கு தண்ணீர் தேக்கி இருக்கும். ஆற்றில் தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும் போதும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் சமயத்திலும் மின் உற்பத்தி முழுமையாக நடக்கும். மற்ற சமயத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்றம், இறக்கமாக நடக்கும்.கடந்த பிப்., மாதத்தில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. கோடைகால குடிநீருக்கு மட்டும் ஆற்றில் வந்தது. இதனால் குடிநீர் தேவைக்கு மட்டும் தடுப்பணை நீர் தேக்கத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.தொடர் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளதால், மீண்டும் தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நீர்தேக்கம் பகுதி கடல் போல காணப்படுகிறது. மேலும், தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி நடக்கிறது.