கரைபுரண்ட காவிரியில் தண்ணீர் வற்றிய அவலம் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
மோகனுார், டிச. 8-கரைபுரண்டு ஓடிய காவிரியில், தற்போது தண்ணீர் வற்றி, மணல் மேடாக காணப்படுவதுடன், ஆற்றின் நடுவில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.கர்நாடக மாநிலத்தில், கடந்த ஜூலை மாதத்தில், கனமழை பெய்ததால், அங்குள்ள கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து, 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம், 120 அடி என்ற முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து, உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதனால், காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடியது. இரு கரைகளையும் தொட்டு சென்றதால், கடல்போல் காட்சியளித்தது.ஆனால், தற்போது, ஆங்காங்கே சிறு சிறு குட்டைகளாக தண்ணீர் தேங்கி நிற்பதுடன், சொற்ப அளவிலேயே தண்ணீர் ஓடுகிறது. அவற்றை கொண்டு, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்., நிர்வாகம், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. மேலும், காவிரி ஆற்றின் நடுவில், மணல் திட்டு காணப்படுவதுடன், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.