மக்கள் குறைதீர் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ.7.06 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்
நாமக்கல், டிச. 24-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 511 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில், 3 பேருக்கு, 2.42 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர் கடனுதவி, தொழிலாளர் நலத்துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தில், 8 பேருக்கு, 4.10 லட்சம் ரூபாய் இயற்கை மரண உதவித்தொகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கலெக்டரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, கல்லுாரி மாணவர் நவீன்குமாருக்கு, 24,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அத்துறை சார்பில், 8 பேருக்கு, காதொலி கருவி, கண் கண்ணாடி, அதிரும் மடக்கும் குச்சி, பிரெய்லி கடிகாரம், சிறப்பு சக்கர நாற்காலி, 3 சக்கர நாற்காலி என, 30,206 ரூபாய்- மதிப்பில் உதவி உபகரணங்கள் என மொத்தம், 20 பேருக்கு, 7.06 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக, 'வீட்டுக்கொரு விஞ்ஞானி-2024' போட்டியில், மாநில அளவில் வெற்றி பெற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ செல்லும் வாய்ப்பை பெற்றுள்ள கொல்லிமலை, நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் கவுசிகா, நதியா, உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் சங்கர், அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோருக்கு கலெக்டர் உமா வாழ்த்துக்களை தெரிவித்தார்.டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.