நாமக்கல்: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த எழுத்து தேர்வில், 905 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில், காலியாக உள்ள, 369 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடத்துக்கான எழுத்து தேர்வு, நேற்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. காலை, 9:30 முதல் 12:30 மணி வரை, முதல் தாள் தேர்வும், மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வும், இன்று காலை, 9:30 முதல் பகல், 12:30 மணி வரையும், மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரையும் தேர்வு நடக்கிறது.இந்த தேர்வுக்காக, தமிழகம் முழுவதும், 59,630 பங்கேற்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், மூன்று மையங்களில், இத்தேர்வு நடக்கிறது. நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி, ஸ்பெக்ட்ரம் அகாடமி மெட்ரிக் பள்ளிகளில் இந்த எழுத்து தேர்வு நடந்தது. அதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, முதல் தாளுக்கு, 1,199 பேரும், இரண்டாம் தாளுக்கு, 1,255 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அதில், காலையில் நடந்த முதல் தாள் தேர்வில், 757 பேர் பங்கேற்றனர். 442 பேர் கலந்து கொள்ளவில்லை.அதேபோல், மாலையில் நடந்த, இரண்டாம் தாள் தேர்வில், 792 தேர்வர்கள் கலந்து கொண்டனர். 463 பேர் பங்கேற்கவில்லை. இன்று (ஜன., 7), காலையில் நடக்கும் தேர்வில், 18 பேரும், மாலையில், 1,255 பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.