| ADDED : ஜூன் 15, 2024 11:19 PM
குன்னூர்;குன்னூரில், மலை ரயிலின், 125வது ஆண்டு விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த, 1899 ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. நூற்றாண்டு பாரம்பரியத்துடன் இயங்கி வரும் இந்த மலை ரயிலின், 125வது ஆண்டு மலை ரயில் தினம் நேற்று குன்னூரில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு அலங்கரிக்கப்பட்ட மலை ரயில் வந்தது. கோவை ரயில்வே பணிமனை முதன்மை அலுவலர் அனூஜ் ராத்தோர் கேக் வெட்டி பணிமனை ஊழியர்கள், மலை ரயில் ரத அறக்கட்டளை நிர்வாகிகள், சுற்றுலா பயணியருக்கு வழங்கினார்.125 வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 'செல்பி' ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தது. மலை ரயில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எக்ஸ் கிளாஸ் ரயில் இன்ஜின் முன்பு ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.