| ADDED : மார் 21, 2024 10:43 AM
குன்னுார்:குன்னுாரில் தொடரும் வறட்சியின் தாக்கத்தால், 80நாட்களில் 35 இடங்களில் வனத்தீ ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு வறட்சி அதிகரித்துள்ளது. புகைபிடித்து வீசி செல்லுதல், ஆக்கிரமிப்புக்காக தேயிலை தோட்டம் அருகே தீ வைப்பது உட்பட பிற காரணங்களில், காட்டு தீ ஏற்பட்டு மரம், செடி, புல், மூலிகை தாவரங்கள் அழிகின்றனநடப்பாண்டில், 80 நாட்களில் குன்னுார் பகுதியில் மட்டும், 35 இடங்களில் பரவிய தீயை, குன்னுார் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் அணைத்துள்ளனர். சில இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத மலை பகுதிகளில் நடந்து சென்று சிரமத்துடன்தீயை அணைத்துள்ளனர். இதில், பாரஸ்ட் டேல் பகுதியில் பிடித்த வனத் தீயை, 9 நாட்களாக போராடி அணைத்தனர். மேலும், கால்வாயில் சிக்கிய காட்டெருமைகள், பசு மீட்பு, வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடித்தது என குன்னூர் தீயணைப்பு நிலையம் சார்பில், 57 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.