நேற்றைய மொழி தேர்வில் 76 மாணவர்கள் ஆப்சென்ட்
ஊட்டி, ; நீலகிரி மாவட்டத்தில், பிளஸ்--2 பொதுத்தேர்வில், முதல் நாள் மொழி தேர்வில், 6,224 பேர் பங்கேற்றனர்.'ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் கல்வி மாவட்டங்களில் உள்ள, 41 மையங்களில், 2,925 மாணவர்கள் மற்றும் 3,395 மாணவிகள்,' என, மொத்தம், 6,320 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மொழி பாட தேர்வான முதல் நாளில், 6,224 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 76 பேர் முதல் நாள் தேர்வுக்கு வரவில்லை. 20 பேர் விலக்கு பெற்றிருந்தனர். தேர்வு மையத்தில், காலை, 10:00 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. அதன் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை எழுதும் வகையில், 5 நிமிட நேரம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. கேள்வித்தாள் படித்து பார்க்க, 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. 'பிளஸ்-2 தேர்வு பணியில், 42 முதன்மை கண்காணிப்பாளர்கள், 41 துறை அலுவலர்கள், 82 அலுவலக பணியாளர்கள், 618 அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள், 15 பேர்,' என, மொத்தம், 798 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேல்நிலை தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு பறக்கும் படையினர், 81 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு எழுத வந்த மாணவர்கள் 'எலக்ட்ரானிக்' பொருட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல தடை செய்யப்படிருந்தது.