ஊட்டி:ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில், பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ரேஷன் பொருட்களின் இருப்பு விபரங்கள், புதிய ரேஷன் கார்டு, 'பயோமெட்ரிக்' முறையில் விற்பனை விபரங்கள், பகுதி நேர ரேஷன் கடைகள் தொடங்குவது ஆகியவை குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:மாநில அரசு, பொது மக்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, தங்குவதற்கு இருப்பிடம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை தடையின்றி வழங்குவதுடன், புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் மண்ணெண்ணெய் பற்றாக்குறை உள்ளதாக வந்த புகாரின்படி, மத்திய அரசுக்கு மண்ணெண்ணெய் வழங்க முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.பந்தலுார் வட்டத்தில் பெய்த கனமழையில், பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், குழு அமைத்து, சுற்றுலா சம்மந்தமான பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அமைச்சர் கூறினார். இதில், கலெக்டர் உட்பட, அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.