உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியின மாணவிகளுக்கு தனி கால்பந்து அணி

பழங்குடியின மாணவிகளுக்கு தனி கால்பந்து அணி

பந்தலுார்: பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில், பழங்குடியின மாணவிகளை மட்டும் உள்ளடக்கிய கால்பந்து அணி உருவாகி வருவது வரவேற்பை பெற்றுள்ளது. பந்தலுார் அருகே, எருமாடு, அய்யன்கொல்லி, அம்பலமூலா உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின இளையோர் மத்தியில், கால்பந்து விளையாட்டில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், தற்போது பள்ளிக்கு வராமல் இடை நின்ற பழங்குடியின மாணவிகள், அம்பலமூலா அரசு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கும் கால்பந்து மீது நாட்டம் ஏற்பட்ட நிலையில், பிதர்காடு பகுதியில், செயல்பட்டு வரும், 'யுவ சைதன்யா கிளப்' நிர்வாகி கண்ணன், 22, பழங்குடியின மாணவிகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு தொடர்ச்சியாக கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். கண்ணன் கூறுகையில், ''பழங்குடியின மாணவ, மாணவிகள் நல்ல உடல் திறன் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களை விளையாட்டில் நாட்டம் செலுத்த வைத்தால், படிப்பு மீதான நாட்டமும் அதிகரிக்கும்.தீய பழக்கங்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் முடியும்.தற்போது, 22 மாணவிகள் பயிற்சி பெற்றுள்ள நிலையில், போட்டியில், 18 மாணவிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், 18 பேர் தற்போது பள்ளி அளவிலான மண்டல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். தொடர்ந்து இவர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்க செய்யும் அளவில் முயற்சி மேற்கொண்டுள்ளோம்,''என்றார்.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'பழங்குடியின மாணவிகள் ஆர்வத்துடன் கால்பந்து விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான சீருடை மற்றும் 'பூட்' உள்ளிட்ட பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்கினால் அவர்கள் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை