| ADDED : ஜூலை 01, 2024 02:22 AM
குன்னுார்;''நோய் பாதிப்புகளை தவிர்க்க இயற்கை முறையிலான ஆர்கானிக் தயாரிப்புகளை பயன்படுத்த மக்கள் முன் வர வேண்டும்,'' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுாரில் இயற்கை முறையிலான காய்கறிகள் விற்பனைக்கான வார சந்தை,சிம்ஸ் பூங்கா அருகே உள்ள அரசு தோட்டக்கலை துறை அலுவலகத்தில் துவங்கியது. அதில், காய்கறிகளின் பசுமை சோதனை கருவி மூலம், காய்கறிகளின் 'நைட்ரேட்', நீர் கடினத்தன்மை, பழங்கள் கதிர்வீச்சு சோதனைகள் செய்யப்படுகிறது.இது குறித்து, ஆர்கானிக் விவசாயி தனிஷ் கூறுகையில்,''அதிக அளவு நைட்ரேட் உள்ள பழம் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளவதால் ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனின் அளவு குறையும். குறிப்பாக ரசாயன உரங்கள் மருந்துகள் பயன்படுத்தும் காய்கறிகளில் குறிப்பிட்ட அளவீடுகளுக்கு மேல் நைட்ரேட் இருப்பதால் உடலில் நைட்ரைட்டுகள் அதிகரித்து புற்றுநோய் கூட ஏற்படுகிறது. ஒவ்வொரு பழங்கள் மற்றும் காய்கறிகளின் இதன் அளவீடு மாறுபடுகிறது. குறிப்பாக, எலுமிச்சையில், 30 எம்.ஜி. நைட்ரேட் குறைவாக இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் நைட்ரேட் அளவீடு குறைவாக இருக்கிறது. எனவே, நோய் பாதிப்புகளை தவிர்க்க இயற்கை முறையிலான ஆர்கானிக் தயாரிப்புகளை பயன்படுத்த மக்கள் முன் வர வேண்டும்,''என்றார்.தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,''இயற்கை விவசாயம் அதிகரிக்க அரசு ஊக்குவித்து, நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே, இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். இயற்கை சார்ந்த ஆர்கானிக் காய்கறிகளை வாரந்தோறும் சனிக்கிழமை குன்னுாரில் உள்ள சிம்ஸ் பார்க் தோட்டக்கலை துறை அலுவலக மையத்தில் நடக்கும் வார சந்தையில் மக்கள் நேரில் வந்து வாங்கி பயன் பெறலாம்,''என்றனர்.