| ADDED : ஜூலை 01, 2024 02:28 AM
மேட்டுப்பாளையம்;நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கடந்த மே 7ம் தேதி முதல் இ- பாஸ் முறை அமலில் உள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை இம்முறையானது அமலில் இருக்கும். இதையடுத்து பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் இருந்து குன்னுார் வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலையில், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் துாரிப்பாலம் அருகே இ- பாஸ் சோதனை சாவடி மையம் உள்ளது. இச்சோதனை சாவடியில், இ- பாஸ் பெறாத வாகனங்களுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் இ-பாஸ் எடுத்து தருகின்றனர். இச்சோதனை சாவடியில் குன்னுார் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பண்ணாரி தலைமையிலான போலீசார் நேற்று, இங்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனங்களில் போதை பொருள் உள்ளதா, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா, வாகனங்களை யாரவது திருடி வந்துள்ளனரா, சந்தேகம்படும்படியான நபர்கள் உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வாகன ஓட்டுனர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் வாகனங்களை மது அருந்திவிட்டோ அல்லது போதை பொருள் சாப்பிட்டுவிட்டோ இயக்க கூடாது. போதை பொருள் பயன்படுத்தினால் உடல் நலம் கெடும், குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.