| ADDED : ஜூலை 08, 2024 12:21 AM
பந்தலுார்:பந்தலுாரில் கால்நடை வளர்ப்போருக்கு அசோலா வளர்ப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில், கால்நடை வளர்ப்பை மேம்படுத்தும் வகையில், அசோலா பசுந்தீவன வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு, அதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பந்தலுாரில் நடந்தது. திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்று, திட்டத்தின் பயன்கள் மற்றும் அசோலா வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். கால்நடை டாக்டர் பாலாஜி உபகரணங்களை வழங்கி பேசுகையில், ''அசோலா ஒரு சிறந்த பசுந்தீவனம் மற்றும் மிதக்கும் நீர் வாழ் உயிரி ஆகும். கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிகட்ட அசோலா பசுந்தீவனம் வளர்ப்பது ஒரு சிறந்த முறையாக உள்ளது. இந்த தீவனம் தழைசத்தை வழங்க கூடியதால் கால்நடைகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும். இந்த தீவனத்தை வளர்ப்பதற்கு, அரசு கால்நடைத்துறை மானியத்தில் கடன் உதவி வழங்கினால், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்,''என்றார்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார். மகாத்மா காந்தி பொது சேவா மைய அமைப்பாளர் நவ்சாத் உட்பட பயனாளிகள் பங்கேற்றனர். ரவீந்திரன் நன்றி கூறினார்.