மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப கோரி சி.ஐ.டி.யு. , தர்ணா
ஊட்டி: மின்வாரியத்தில் காலியாக உள்ள, 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்பக் கோரி, ஊட்டியில் சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. ஊட்டி ரயில் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலக முன் நடந்த தர்ணா போராட்டத்திற்கு நிர்வாகி அபுபக்கர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மின் ஊழியர் அமைப்பின் நிர்வாகி மைக்கேல், செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். அதில், 'தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள, 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பணி மாற்றம் செய்து சொந்த மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்; எழுத்து தேர்வில் தேர்வு பெற்று பணி வழங்கப்படாமல் உள்ள, 5,000 கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்,' உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.