உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், மூன்று தினங்களுக்கு முன், வீசிய சூறாவளி காற்றால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சிறுமுகை, லிங்காபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: பருவ மழை சரியாக பெய்யாததால், கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாமல், வறண்டு காணப்படுகிறது. இருந்த போதும் ஆற்றில் ஆங்காங்கே, உள்ள குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வைத்து, வாழைக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் வாழைத்தார் அறுவடை செய்யும் அளவில் இருந்தன. ஒவ்வொரு விவசாயிகளும் கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளோம். வாழை அறுவடை நடைபெறும் பொழுது, ஓராண்டு விவசாயம் செய்த பலனாக, ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன், பத்து நிமிடம் வீசிய சூறாவளி காற்றால், சிறுமுகை, காந்தவயல், லிங்காபுரம் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில், பயிர் செய்திருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட, வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்து விழுந்த வாழை மரத்தை வெட்டி அப்புறப்படுத்த, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட உள்ளது. எனவே இயற்கை சீற்றத்தால், ஏற்பட்ட வாழை சேதத்திற்கு, விவசாயிகளுக்கு தமிழக அரசு, இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கடன் தொல்லையிலிருந்து ஓரளவு விவசாயிகள் மீண்டு வர முடியும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை