உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்க்கிங் தளம் அமைக்கும் பணி துவக்கம்

பார்க்கிங் தளம் அமைக்கும் பணி துவக்கம்

குன்னுார்;குன்னுாரில், இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், நவீன 'பார்க்கிங்' அமைக்க நிலம் சமன்படுத்தும் பணிகள் துவங்கியது. குன்னுார் மவுண்ட் ரோடு அருகே, மிகவும் பழமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வந்த கணேஷ் தியேட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

அமைச்சர் ஆய்வு

அந்த இடம் தொடர்பாக, ஐகோர்ட்டில் தனியாரால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு, இந்து அறநிலையத் துறைக்கு சாதகமாக வந்தது. கட்டடத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் முறையாக பராமரிக்காமல் விடப்பட்டதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்நிலையில், கடந்த மே மாதம் இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, விநாயகர் கோவில் மண்டபத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அறிவுறுத்தினார்.

தடுத்து நிறுத்தம்

அதே இடத்தில், 16 கோடி ரூபாய் மதிப்பில் பார்க்கிங் தளம் அமைக்கும் பணியை நகராட்சி துவக்கியது. இதனை கண்ட இந்து அறநிலைய அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை ஆய்வு மேற்கொண்ட போது, பார்க்கிங் தளம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று இந்து அறநிலைய துறை சார்பில் பொக்லைன் பயன்படுத்தி நிலம் சமன்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

10 கோடி ரூபாய்

குன்னுார், இந்து அறநிலைய செயல் அலுவலர் ராஜேஷ் கூறுகையில்,' அறநிலையத்துறை அமைச்சர், கலெக்டர் உத்தரவின் பேரில் நவீன பார்க்கிங் தளம் அமைக்கப்பட உள்ளது. கட்டடம் உள்ள, 49 சென்ட் இடத்தில் பார்க்கிங தளம் அமைப்பதுடன், விநாயகர் கோவில் மண்டபம் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை