ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு ஊட்டியில் ஆலோசனை கூட்டம்
ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகளை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில், '' நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் ( தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளிலுள்ள, 689 ஓட்டு சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டது.அதில், குன்னுார் சட்டசபை தொகுதியில் புதிதாக ஒரு ஓட்டுசாவடி அமைப்பது தொடர்பாக, குன்னுார் வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து பிரேரணைகளும், குன்னுார் மற்றும் ஊட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து, 13 இடங்களில் ஓட்டுசாவடிகளை மாற்றுவது தொடர்பாக பிரேரணைகளும் பெறப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் எழுத்து பூர்வமாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில், குன்னுார் நகராட்சி கமிஷனர் சசிகலா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.