தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் தொங்கும் மர கிளைகளால் பாதிப்பு
ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பு அருகே, துானேரி செல்லும் சாலையில் தொங்கும் மரக்கிளைகள் அகற்றப்படாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா சந்திப்பு வழியாக, 'கெந்தொரை, துானேரி, இடுஹட்டி, கக்குச்சி மற்றும் கூக்கல்தொரை,' என, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோத்தகிரி- ஊட்டி சாலை இயற்கை சீற்றங்களில் துண்டிக்கப்படும் பட்சத்தில், கட்டபெட்டு, அஜ்ஜுர், கெந்தொரை - தொட்டபெட்டா சந்திப்பு வழியாக, ஊட்டிக்கு செல்ல இச்சாலை முக்கிய மாற்று பாதையாக அமைந்துள்ளது.கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறி ஏற்றி வரும் கனரக வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கமும் இந்த சாலையில் அதிகமாக உள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம், குறிப்பிட்ட சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், சாலையோர அபாய மரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டுள்ளன. ஆனால், தொட்டபெட்டா சந்திப்பு அருகே, அபாய மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையில் சாய்ந்தவாறு உள்ளன. இதனால், அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், மழை நாட்களில், மரக்கிளைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் உள்ள அபாய மரங்கள் மற்றும் சாய்ந்துள்ள கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.