| ADDED : ஜூலை 22, 2024 10:55 PM
குன்னுார்:குன்னுாரில் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் விழுந்ததுடன் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.புரூக்லேண்ட், பழைய அருவங்காடு, உபதலை, கெக்கட்டி, சப்ளைடிப்போ, வெலிங்டன், சிங்கார தோப்பு உட்பட, 24 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பாரத் நகர் பகுதியில் நள்ளிரவில் செல்லம்மாள் என்பவரின் வீட்டின் மீது பெரியளவிலான மரம் விழுந்தது. இதே போல, ஜெகதளா துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் மின்கம்பங்களின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இரு டிரான்ஸ்பார்மர்கள் உயர் மின்னழுத்த கம்பிகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சீரமைப்பு பணிகளை மின் ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.