39,500 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
மேட்டுப்பாளையம்:காரமடை வட்டாரத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாமில், 39,500 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.தேசிய குடற்புழு நீக்க முகாம் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காரமடை வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 220 இடங்களில் நடந்தன. இதில் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய குடற்புழு நீக்க நாளில் காரமடை வட்டாரத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 36 துணை சுகாதார நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களில், 1 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 39,500 குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன, என்றார்.---