| ADDED : ஆக 06, 2024 05:57 AM
சூலுார்: கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்தவோ, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பாரி ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு விபரம் :ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் உள்ளிட்ட அனைத்து நிலை பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கணினி உதவியாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் பணி வரன்முறைப் படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டத்துக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பிற துறையின் பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும். கிராம ஊராட்சிகளை, பேரூராட்சி மற்றும் நகராட்சியாக தரம் உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, மற்றும் நகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு, நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில, மாவட்ட, வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.