| ADDED : ஏப் 14, 2024 11:56 PM
கூடலுார்:'கூடலுார்-- மைசூரு இடையே வார விடுமுறை நாட்களில் பயணிகள் சிரமத்தை தவிர்க்க, சிறப்பு பஸ் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.கூடலுாரில் இருந்து தினமும், கல்வி வேலை வாய்ப்பு மற்றும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்கு மைசூரு, பெங்களூருக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். எனினும், கூடலூரிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லாததால், ஊட்டி மற்றும் கேரளாவில் இருந்து இயக்கப்படும் பஸ்களை மட்டுமே பயணிகள் நம்பியுள்ளனர்.வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், இருக்கைகள் கிடைக்காமல் பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.வார விடுமுறை காரணமாக, நேற்று முன்தினம் நேற்று மைசூருக்கு செல்ல ஏராளமான பயணிகள் புதிய பஸ் ஸ்டாண்ட் குவிந்தனர்.ஆனால், போதிய பஸ் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்து, பயணிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.பயணிகள் கூறுகையில், 'பயணிகள் சிரமத்தை தவிர்க்க, வார விடுமுறை மற்றும் முக்கிய பண்டிகை விடுமுறை நாட்களில், கூடலுார்- மைசூரு இடையே சிறப்பு பஸ் இயக்க தமிழக மற்றும் கர்நாடகா போக்குவரத்துக் துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.