மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, வரும், 7ம் முதல் இ--பாஸ் பதிவு செய்து வர வேண்டும்.நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை முன்னிட்டு, இ--பாஸ் முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் டி.என்.இ.ஜி.,வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ--பாஸ் பதிவு செய்து நீலகிரிக்கு பயணம் மேற்கொள்ளலாம். இ--பாஸ் தேவைப்படுபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம், இ--பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ--பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து, கியூ ஆர் கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் அவர்களது மொபைல் எண், வெளிநாடுகளிலிருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் அவர்களது இ-மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களை சமர்ப்பித்து, இ--பாஸ் பதிவு செய்து கொள்ளலாம். வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட எண் கொண்ட ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ--பாஸ் பதிவு செய்து வருகை தர வேண்டும். அரசுப் பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இ--பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் 'டி. என் 43' எண் கொண்ட வாகனங்களுக்கு இ--பாஸ் தேவையில்லை. வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களை வாங்கி, நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவு சான்று, காப்புச் சான்று மற்றும் நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து, உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இ--பாஸ் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், சுமார் 100 பணியாளர்கள் கொண்டு மாவட்டத்திற்குள் வருகை புரியும் பயணிகளிடம் இ--பாஸ் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளில் 3 ஷிப்ட் முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இ--பாஸ் பதிவு நடைமுறையானது மாவட்டத்தில் ஜூன் 30-ம் தேதி வரை இருக்கும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
03-Oct-2025