அதிகாலை பனி பொழிவு; பசுந்தேயிலை மகசூல் பாதிப்பு
கூடலுார்l: கூடலுார் பகுதியில், அதிகாலையில் பனிப்பொழிவும் பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருவதால், பசுந்தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதியில், நடப்பு ஆண்டு துவக்கம் முதல் கோடை மழை ஏமாற்றி வருகிறது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கோடைக்கு முன்பாக வறட்ச்யின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவின் தாக்கமும், பகல் நேரங்களில் வெயிலின் பாதிப்பும் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால், பசுந்தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாய தொழிலாளர்கள், வேலை இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். கோடை மழை இன்றி, வறட்சி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பசுந்தேயிலை உற்பத்தி தொடந்து பாதிக்கும் சூழல் உள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு, தொடர்ந்து கோடை மழை ஏமாற்றி வருவதாலும், அதிகாலையில் தொடரும் பனிப்பொழிவு, பகலில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், பசுந்தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடையில், ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்ய அரசு சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்,' என்றனர்.