உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு

சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு

ஊட்டி;ஊட்டி நகராட்சி பகுதிகளின் பல இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பையால், சுற்றுலா நகரின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகளில் 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஆண்டு முழுவதும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதன் நகர் பகுதிகளிலிருந்து தினசரி, 'மட்கும் குப்பை; மட்காத குப்பை,' என, 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தீட்டுக்கல் குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த பணியில் மொத்தம், 185 துப்புரவு பணியாளர்கள் மட்டும் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதில், 82 தற்காலிக பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

பற்றாக்குறையால் பணியில் தொய்வு

நாள்தோறும், காலை, 8:00 மணிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க செல்ல வேண்டும். பணிக்கு செல்லும் துப்புரவு பணியாளர்கள் முதலில் குடியிருப்பு வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். இந்நிலையில், நகராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தாலும், பல வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், வார்டுகளில் காலை நேரத்தில் குப்பைகள் சேகரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.

ஆங்காங்கே குவியும் கழிவுகள்

இதன் காரணமாக, பல இடங்களில் மக்கள் குப்பை மேலாண்மை திட்டத்துக்கு ஒத்துழைப்பு தராமல், குப்பைகளை வீசி எறிந்து செல்வதால் குப்பை குவிந்து ள்ளது.இதை தவிர, ஓட்டல், காட்டேஜ், ரெஸ்ட்டாரென்ட் பகுதிகளுக்கும் சென்று உணவு கழிவுகளை எடுத்து செல்ல வாகனங்கள் காத்திருப்பதாலும் தாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண இதுவரை நடவடிக்கை இல்லை.ஆண்டு முழுவதும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், ஊட்டியில் அவர்களால் குவியும் குப்பைகளை குப்பையை சேகரிக்கவும், தற்போதுள்ள துாய்மை பணியாளர்கள் அவதிப்படும் சூழல் தொடர்கிறது.

சுற்றுலா பயணிகளாலும் பாதிப்பு

ஊட்டியின் சுற்றுலா வருமானத்தில், பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் சுற்றுலா துறை, ஊட்டியின் துாய்மையை காக்கும் வகையில், நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கி, ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை, ஊட்டி நகராட்சிக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து, 'ஷிப்ட்' முறையில் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நகரின்துாய்மையை காக்க முடியும்.நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,'' ஊட்டி துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது உண்மைதான். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் குப்பை குவியாமல் இருக்க கண்காணிப்பு தொடரும். உள்ளூர் மக்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.

21 போதுமா...

ஊட்டி நகராட்சி, 36 வார்டுகளில், ஒரு வார்டுக்கு, 10 துாய்மை பணியாளர்கள் வீதம், 360 துாய்மை பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 185 துாய்மை பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். குப்பைகளை சேகரிக்க, 40 வாகனங்கள் இருக்க வேண்டும். 21 வாகனங்கள் மட்டுமே உள்ளன. அதில், 5 வாகனங்கள் பழுதடைந்துள்ளன. இதனால், பல இடங்களில் குப்பை சேகரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஊட்டி மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ள நிலையில், துாய்மை பணியாளர்கள்; வாகன பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே நகரின் சுகாதாரத்தை காக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி