| ADDED : ஜூலை 31, 2024 09:59 PM
கூடலுார்:கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், நிலச்சரிவில் உயிரிழந்த, கூடலுாரைச் சேர்ந்த இருவரின் குடும்பத்துக்கு, தமிழக அரசு அறிவித்த தலா, 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, சுற்றுலாத்துறை அமைச்சர், குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.கேரள மாநிலம், வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில், கூடலுார் மரப்பாலம் அட்டிகொல்லி பகுதியை சேர்ந்த காளிதாஸ், 32, அய்யன்கொல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார் ஆகியோர் உயிரிழந்தனர்.அவர்கள் உடல் நேற்று முன்தினம், மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இறந்தவர்களின் குடும்பத்திற்கு, மாநில அரசு சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா, 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இறந்தவர்களின் இறுதிச்சடங்கு நேற்று சொந்த ஊரில் நடந்தது.அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தாரை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த நிவாரண தொகை தலா, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நீலகிரி மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.