உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படுகர் மக்களின் கிராமங்களில் ஹிரியோடைய்யா திருவிழா

படுகர் மக்களின் கிராமங்களில் ஹிரியோடைய்யா திருவிழா

கோத்தகிரி;நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாயம் மக்களின் குலதெய்வமான ஹிரியோடைய்யா திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில், ஊட்டி தொதநாடு சீமையை தலைமை இடமாக கொண்ட, கடநாடு ஹிரியோடைய்யா கோவிலில், 33 கிராம மக்கள் ஒருங்கிணைந்து காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டனர். இதேபோல, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி, கம்பட்டி மற்றும் டி. மணியட்டி கிராமங்களிலும் விழா கொண்டாடப்பட்டது.நேற்று காலை விழா நடைபெறும் கிராமக் கோவில்களில் இருந்து, சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைத்திறக்கப்படும் பனகுடிக்கு (வனக்கோவில்) சங்கொலி எழுப்பி பக்தர்கள் சென்றனர்.அங்கு, பிரம்புகளை உரசி அதில் இருந்து வெளியேறிய தீப்பொறியில் நெய்தீபம் ஏற்றியப்பின், முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசும்பால், கொம்பு தேன் மற்றும் தும்பையை வைத்து, ஐயனுக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டது. இக்கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் மற்றும் ஆண்கள் மட்டும் பூஜையில் பங்கேற்றனர். அனைவரும் காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையை முடித்த பக்தர்கள் மீண்டும் சங்கொலி எழுப்பிய கிராம கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர். இவ்விழாவிலன் சிறப்பு அம்சமாக, இன்று (செவ்வாய் கிழமை) கிராம கோவிலுக்கு அருகே அமைந்துள்ள 'ஹக்க பக்க' கோவிலில், ஏற்கனவே வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்த மூங்கில் இழைகளை கயிறாக நெய்து, புதிதாக அறுவடை செய்து வந்த தானிய வகைகளை கோர்த்து, மாலையாக கட்டி ஹரிகட்டுதல்' பூஜை நடக்கிறது.இந்த பூஜை நடத்துவதன் மூலம், ஆண்டு முழுவதும் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு இருக்காது என்பது ஐதீகமாக உள்ளது. இந்த விழாவையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் படுகு சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்கள், விழாக்கோலம் பூண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை