ஊட்டி:கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து, நீலகிரியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்த, 180 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை, 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுக்க இந்த சம்பவம் பெரும் அதிர்வலை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி,. உத்தரவிட்டார். இந்நிலையில், கோத்தகிரி செம்மனாரை பகுதியை சேர்ந்த ராமன் உட்பட, 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., சவுந்தர்ராஜன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதை தொடர்ந்து, மதுவிலக்குத்துறை போலீசார் கோத்தகிரி செம்மனாரை, கோழிக்கரை, கிளிப்பி, வாகைபண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குழுவாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு குழு கூட்டம்
இந்நிலையில், ஊட்டி, பாம்பே கேசில் பகுதியில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எஸ்.பி., சுந்தரவடிவேல் பங்கேற்று பேசுகையில், ''சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை குறித்து தகவல் தெரிந்தால், 10581 என்ற இலவச எண்ணிலும், நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் செயல்படும், 9789800100 எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,'' என்றார். தாசில்தார் சரவண குமார், டி.எஸ்.பி., யசோதா, இன்ஸ்பெக்டர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.