சாலையில் உலா வந்த மக்னா யானையால் அச்சம்
கூடலுார்:கூடலுார், தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் உலா வந்த மக்னா யானையால் வியாபாரிகள், ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் குறிப்பாக யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இவைகள் உணவு தேடி, முதுமலை ஒட்டிய குடியுரிப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு முதுமலை கார்குடி வனப்பகுதியில் இருந்து அகழியை கடந்து தொரப்பள்ளி நகரில் நுழைந்த மக்னா யானை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 'ஹாயாக' நடந்து வந்தது. வியாபாரிகள், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து, சாலையோரம் திறந்தவெளியில் கொட்டப்பட்ட குப்பையில் கிடந்த உணவுகளை உண்ண துவங்கியது. சில இளைஞர்கள் ஆபத்தை உணராது அதன் அருகே சென்று மொபைல் போனில் 'வீடியோ' எடுத்து இடையூறு ஏற்படுத்தினர்.தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் வாகனத்தில் உள்ள அலாரம் சப்தத்தை எழுப்பி யானையை விரட்டினார்.மக்கள் கூறுகையில், 'முதுமலையில் இருந்து காட்டு யானைகள் தொரப்பள்ளிக்குள் நுழைவதை தடுக்க வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். பராமரிப்பின்றி உள்ள அகழியை யானைகள் இரவில் கடந்து ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனை நிரந்தரமாக தடுக்க வேண்டும்,' என்றனர்.
போராட்டம் நடத்த முடிவு
ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், கூடலுார் ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பிய மனுவில்,'இப்பகுதியில் காட்டு யானைகள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகள் வருவதை தடுக்க அமைக்கப்பட்ட அகழி பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே போராட்டம் நடைபெறும்,' என, கூறி உள்ளார்.