மஹா கணபதி கோவில் பிரதிஷ்டை தின உற்சவம்
பாலக்காடு;பாலக்காடு அருகே, சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி அருகில் உள்ளது சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில். இங்கு வைகாசி மாதம் பிரதிஷ்டை தின உற்சவம் நடப்பது வழக்கம்.நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை நடை திறந்ததும் துவங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஐந்து யானைகளின் அணிவகுப்பில் 'காழ்சசீவேலி' நிகழ்வு நடந்தது.காலை, 11:30 மணிக்கு கும்பாபிஷேகம், 12:15 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பு உடன் உற்சவர் எழுந்தருளி அருள் பாலித்தார். இரவு, 9:30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி உடன் உற்சவர் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.